திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் தெற்கு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் நூற்றுக் கணக்கானோர் படித்து வருகின்றனர். இந்நிலையில், 7-ம் வகுப்பு கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு என்பவர் சில மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சைல்டு ஹெல்ப்லைன் எண் 1098-க்கு புகார் சென்றது.
இதையடுத்து, பள்ளி கல்வி துறையினர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா, மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் ஆறுச்சாமி, தெற்கு போலீஸார் ஆகியோர் நேற்று மதியம் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இதில் பெற்றோர் மற்றும் புகார் அளித்த வகுப்பு மாணவிகளிடம் தனித்தனியாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா கூறும் போது, “7-ம் வகுப்பு ஆசிரியர் ஒருவர், குழந்தைகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகார் வந்தது. இது தொடர்பாக அனைவரிடமும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு, எழுத்துப்பூர்வமாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார். இதனையடுத்து கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து ஆசிரியரான சுந்தர வடிவேலு தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றது உறுதி செய்யப்படவே, அவரை தேடிச் சென்ற அதிகாரிகள் அங்கு அவரை கைது செய்து அழைத்துவந்து விசாரணை நடத்தினர். இதன்பின்னர் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.