நீலகிரி: தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையில் நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளதால், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இதை தடுக்க தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், கஞ்சா விற்பனை தொடர்ச்சியாக நடைபெறுவதும், கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை அதிகரித்திருப்பதும் போலீஸாருக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், உதகை பேருந்து நிலையப் பகுதியில் மத்திய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த இளைஞர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, 500 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரித்ததில் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கல்லூரி மாணவர் என்பதாலும், எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதாலும் ஜாமீனில் அவரை விடுவித்தனர்.