கோவை செல்வபுரத்தில் பரபரப்பு: 1,303 வீடுகளில் காவல்துறையினர் திடீர் சோதனை; காரணம் என்ன?


கோவை: கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத செயல்களைத் தடுக்கவும், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் புழக்கத்தை தடுக்கவும் தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் கல்லூரி மாணர்வர்களின் அறைகளில் அடிக்கடி காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில், தெற்கு துணை ஆணையர் மேற்பார்வையில், ஒரு உதவி ஆணையர், 5 இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆய்வாளர்கள், 55 காவலர்கள் அடங்கிய குழுவினர் செல்வபுரம் பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

செல்வபுரம் ஐ.யு.டி.பி காலனியில், 6 பிளாக்குகளில் உள்ள 528 வீடுகளிலும், 112 புதிய குடியிருப்பு வீடுகளிலும், 373 பழைய குடியிருப்பு வீடுகளிலும் என மொத்தம் 1,303 வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். வீட்டின் ஒவ்வொரு அறைகளுக்கும் சென்று தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என சோதனை நடத்தினர்.

ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், பெங்களூருவைச் சேர்ந்த ஷேக் இப்ராஹிம் (33), சுதாகர் (64) ஆகியோரை கைது செய்தனர்.

x