புதுச்சேரி: புதுச்சேரியில் யாசகம் எடுப்பவர் போல் நடமாடி திருடி வந்தவரை போலீஸார் கைது செய்து ரூ.1.31 லட்சம் ரொக்கம், இரும்பு சாதனங்களை இன்று பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் (62). இவர் மீது ஏற்கெனவே காலாப்பட்டு, முத்தியால்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதனால், அவர் புதுச்சேரியிலருந்து தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று வசித்து வருகிறார்.
இந்தநிலையில், அவர் கடந்த சில நாட்களாக புதுச்சேரிக்கு வந்து யாசகம் எடுப்பவர் போல கையில் பழைய சாக்குகளை சுமந்து, பழைய தாள்கள் உள்ளிட்டவற்றை சேகரிப்பது போல சுற்றி வந்துள்ளார். அதனால் இரவில் ரோந்து சென்ற போலீஸார் அவரை சந்தேகப்படவில்லை.
இதற்கிடையே கடந்த 5ஆம் தேதி புதுச்சேரி பாரதி தெருவில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஷட்டர் உடைக்கப்பட்டு பணம், பொருள்கள் திருடப்பட்டன. அதுகுறித்து ஒதியன்சாலை போலீஸார் வழக்குப் பதிந்து ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் குற்றவாளியைத் தேடிவந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் காமிராக் காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், மனோகர் யாசகம் எடுப்பவர் போல தொப்பியுடன் இரவில் நடமாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் விசாரித்ததில், பாரதி தெருவில் தனியார் நிறுவனத்தில் பணம் திருடியதை மனோகர் ஒப்புக்கொண்டார். அதன்படி அவரிடமிருந்து ரூ.1.31 லட்சம் ரொக்கம், இரும்பு சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும், அவர் மீது ஏற்கெனவே திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. கைதான மனோகர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் இன்று அடைக்கப்பட்டார். அவர் சமீபத்தில் வேறு திருட்டுகளில் ஈடுபட்டாரா என தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.