ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தொழிலாளி கைது @ திண்டுக்கல்


திண்டுக்கல் அருகே ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி சதீஷ்குமாரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர் 

திண்டுக்கல்: ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை திண்டுக்கல்லில் ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

ஈரோட்டை சேர்ந்த 26 வயது பெண், தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்குச் செல்ல ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். அதே ரயிலில் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையைச் சேர்ந்த தொழிலாளி சதீஷ்குமார் (30) என்பவர் கோவைக்கு பெயிண்டர் பணிக்கு செல்வதற்காக விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார்.

திங்கள்கிழமை அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, மது போதையில் இருந்த சதீஷ்குமார், தனது பெட்டியில் பயணித்த
சகபயணியான 26 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதிகாலை நேரம் என்பதால் மற்ற பயணிகள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் செய்வதறியாது திகைத்த பெண், ரயில் பெட்டியின் உட்புறத்தில் ஒட்டப்பட்டிருந்த உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர் குறித்து புகார் அளித்தார்.

ரயில் கொடைரோடு ரயில்நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்ததால், புகார் குறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து திண்டுக்கல் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணிவெள்ளைசாமி தலைமையிலான ரயில்வே போலீஸார், திண்டுக்கல் ரயில்நிலையத்தில் தயார்நிலையில் காத்திருந்தனர். ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள்கிழமை அதிகாலை 3:30 மணிக்கு திண்டுக்கல் ரயில்நிலையம் வந்தடைந்தது.

அந்த பெண் புகாரில் குறிப்பிட்ட பெட்டியில் ஏறிய போலீஸார், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பிடித்து, திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையம் அழைத்து வந்து, விசாரணை நடத்தினர்.

x