ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பொதுப்பாதையை ஆக்கிரமித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் பெண் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
ராமநாதபுரம் அருகே காட்டூரணி தங்கப்பாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சோனியா. இவர் இன்று கைக்குழந்தை உள்ளிட்ட இரண்டு குழந்தைகளோடு ராமநாதபுரம் ஆட்சியரின் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு தனது மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கேணிக்கரை போலீஸார் தடுத்து நிறுத்தி அப்பெண்ணை காப்பாற்றினர்.
இதுகுறித்து சோனியா கூறும்போது, ''எனது வீட்டின் அருகில் உள்ள கண்ணன் என்பவர் பொதுப்பாதையை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு, என்னை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என தொடர்ந்து அச்சுறுத்துவதாகவும், கடப்பாரை, மண்வெட்டி உள்ளிட்டவற்றால் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.
வீட்டு வாசலில் குப்பைகளை போட்டு எரிக்கிறார். வாசலின் முன் சிறுநீர் கழித்து வைக்கிறார். இதுகுறித்து பலமுறை கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை'' என தெரிவித்தார். அதனையடுத்து போலீஸார் அவரை கேணிக்கரை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.