கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் தனியார் இரும்பு உருக்காலையில் தீக்குழம்பு சிதறி 6 வடமாநில தொழிலாளர்கள் தீக்காயமடைந்த சம்பவம், தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் இரும்பு உருக்காலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உருக்காலையில் பிஹார், ஒடிசா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பழைய இரும்பு கழிவுகளை உருக்கி மறு சுழற்சி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த உருக்கு ஆலையில் இன்று காலை இரும்பு உருக்கும்போது பர்னஸ் இயந்திரத்தில் இருந்து தீக்குழம்பு சிதறி பணியில் இருந்த பிஹாரைச் சேர்ந்த நாகேந்தர், பசில் ரகுமான், பிஹாட் ராம், தில் காஷ் மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சாயல் ஆகிய 6 வட மாநில தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்த 6 தொழிலாளர்களை, உருக்காலை நிர்வாகத்தினர், சக தொழிலாளர்கள் மீட்டு பெத்திக்குப்பம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற 6 தொழிலாளர்களில் தில் காஷ் தவிர மற்ற 5 பேர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.