தாம்பரத்தில் ரூ.7.50 லட்சம் சிக்கியது: ஹவாலா பணமா? - போலீஸார் விசாரணை


பிரதிநிதித்துவப் படம்

தாம்பரம்: தாம்பரத்தில் வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.50 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாம்பரம் காந்தி சாலை சிக்னலில் நேற்று இரவு 12 மணிக்கு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாம்பரம் காந்தி சாலை வழியாக வந்த பைக்கில் வந்த நபரை மடக்கி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக அவர் அளித்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் அந்த வாகனத்தின் இருக்கையை திறந்து சோதித்தனர். அப்போது உள்ளே ஒரு பை இருந்தது. அந்த பையில் ரூ.7.50 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் அது குறித்து விசாரித்தனர்.

போலீஸாரிடம் சிக்கிய நபர் கிண்டி நெடுவாங்கரையை சேர்ந்த நைனாமுகமது (40) என்பது தெரியவந்தது. விசாரணையில், மணலியை சேர்ந்த ஒருவர் பணத்தை கொடுத்து தான் கூறும் இடத்துக்கு சென்று கொடுக்குமாறு கூறியதாகவும் அதன்படி சோமங்கலத்துக்கு சென்று ஒருவரிடம் 4 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு மீதி 7.50 லட்சம் ரூபாயை மற்றொரு நபரிடம் கொடுப்பதற்காக எடுத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் பணம் கொடுத்த நபர் குறித்த விவரங்கள் எதையும் நைனாமுகமது கூறவில்லை. இதனால் சந்தேமடைந்த போலீஸார் நைனா முகமதுவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் பணம் வந்தது எப்படி? பணத்தை கொடுத்து அனுப்பிய நபர் யார்? இது ஹவாலா பணமா? உள்ளிட்ட பல கோணங்களில் தாம்பரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

x