ராமநாதபுரம்; பட்டா பெயர் மாற்ற ரூ.37,000 லஞ்சம் வாங்கிய விஏஓ தலைமறைவு; இ-சேவை உரிமையாளர் கைது!


ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் பட்டா பெயர் மாற்ற விவசாயியிடம் ரூ. 37 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் தலைமறைவான விஏஓவை போலீஸார் தேடி வருகின்றனர்.இது தொடர்பாக இ-சேவை மைய உரிமையாளரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் குமிழேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தந்தை இறந்ததால் அவரது பெயரில் உள்ள விவசாய நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய, பகவதிமங்களம் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன்(29) என்பவரை அணுகியுள்ளார். அதற்கு விஏஓ ரூ.37 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். இதுபற்றி அந்த விவசாயி ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவுறுத்தலின் பேரில், விவசாயி ரூ. 37 ஆயிரம் பணத்தை நேற்று (பிப்.7) மாலை விஏஓவிடம் கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் இ-சேவை மையத்தில் பணத்தை கொடுக்கச் சொல்லியுள்ளார். எனவே இ-சேவை மையத்தில் அதன் உரிமையாளர் அஹமது ஜப்பிரின் அலியிடம், விவசாயி ரசாயனம் தடவிய ரூ. 37 ஆயிரம் லஞ்சப் பணத்தை கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் அஹமது ஜப்ரின் அலியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அஹமது ஜப்ரின் அலி கைது சம்பவத்தை அறிந்த விஏஓ இ-சேவை மையத்துக்கு பணத்தை வாங்க வராமல் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

x