சென்னை: பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் ஆபாச படம் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின்செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், ‘சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுமார் 26 வயது பெண் ஒருவர் தான் 2017ம் ஆண்டு தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது, அதே கல்லூரியில் படித்து வந்த தினேஷ் என்ற ஜுனியர் மாணவர் முகநூலில் அறிமுகமாகி, முகநூலில் குறுஞ்செய்திகள் அனுப்பி வந்ததாகவும், பின்னர் மேற்படிப்புக்காக வேறு கல்லூரிக்கு சென்ற பின்னர் செய்திகள் எதுவும் அனுப்பாத நிலையில், கடந்த 11.09.2024 அன்று தினேஷ் தனது முகநூல் மெசெஞ்சரில் அவரது ஆபாச படத்தை அனுப்பி, வீடியோ காலில் 3 முறை அழைத்ததாகவும், மேற்படி ஆபாசமாக நடந்த தினேஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், மேற்படி பெண் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், பிஎன்எஸ் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் தொடர்புடைய விழுப்புரம் எடப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜானகிராமன் மகன் தினேஷ் (29) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரி தினேஷ் விசாரணைக்குப் பின்னர் நேற்று (07.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.