மேலூரில் பெண் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை - சக மாணவரை தேடும் போலீஸ்


மதுரை: மேலூரில் பெண் விவகாரத்தில் கல்லூரி மாணவர் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடன் படித்த மாணவரை போலீஸார் தேடுகின்றனர்.

மதுரை மாவட்டம், எட்டிமங்கலம் அருகிலுள்ள வீரபத்திரன்பட்டியைச் சேர்ந்த ராஜபாண்டி. இவரது மகன் பாண்டிக்குமார் (20). மதுரை தனியார் கல்லூரியில் பிஏ 2-ம் ஆண்டு படித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு தனது பாட்டியை காரில் அழைத்துச் சென்று புதுசுக்காம்பட்டி பகுதியில் இறக்கிவிட்டு நண்பர்கள் அழைப்பதாக பாட்டியிடம் கூறிவிட்டு, அழகர்கோவில் சாலையில் பாண்டிக்குமார் சென்றுள்ளார். இந்நிலையில், சூரக்குண்டு பிரிவு சாலை அருகே பாண்டிக்குமார் கொலை செய்யப்பட்டு கிடப்பது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பாண்டிக்குமார் உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முன்விரோதம் காரணமாக பாண்டிக்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என, சந்தேகித்தனர். பாண்டிக்குமாரை கடைசியாக செல்போனில் அழைத்த நண்பர்கள் யார், அவருக்கும், நண்பர்களுக்கு முன் பகை இருக்கிறதா போன்ற பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீதர் என்பவர் சிக்கினார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பாண்டிக்குமாருக்கும், ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்த நிலையில், அப்பெண்ணின் மகனும், பாண்டிக்குமார் கல்லூரியில் படித்த மாணவர் ஒருவருக்கு இக்கொலையில் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவரை போலீஸார் தேடுகின்றனர். இதற்கிடையில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாண்டிக்குமாரின் குடும்பத்தினர், உறவினர்கள் மேலூர் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி சிவக்குமார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். கைது செய்யப்படும் என, உறுதியளித்ததால் உடலை வாங்கிச் சென்றனர்.


x