சென்னை: திருவொற்றியூர் பகுதியில் பிரிந்து வாழ்ந்த மனைவியின் சித்தியை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், ”சென்னை, திருவொற்றியூர், வசந்த் நகர் வசித்து வந்தார் தனலட்சுமி (45). திருவொற்றியூர், அய்யா பிள்ளை தோட்டம் பகுதியில் வசித்து வரும் தமிழ்செல்வி என்பவரை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். தமிழ்செல்வி தனலட்சுமியின் அக்கா மகள்.
காளிமுத்துக்கும், தமிழ்செல்விக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால், காளிமுத்து அவரது மனைவி தமிழ் செல்வியை பிரிந்து திருப்பூரில் வசித்து வந்துள்ளார். காளிமுத்து மனைவியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து தகராறு செய்துள்ளார். இதனை தனலட்சுமி கண்டித்து வந்துள்ளார். காளிமுத்து மனைவி தமிழ்செல்வி அவருடன் சேர்ந்து வாழாமல் இருப்பதற்கு தமிழ் செல்வியின் சித்தி தனலட்சுமி தான் காரணம் என நினைத்து அடிக்கடி அவரிடமும் தகராறு செய்து சண்டைபோட்டுள்ளார்.
இந்நிலையில், தனலட்சுமி கடந்த பிப்ரவரி 5ம் தேதி அன்று அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் திருவொற்றியூர், அய்யா பிள்ளை தோட்டம், முதலாவது தெருவில் அவர் வீட்டு வேலை செய்து வரும் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த காளிமுத்து மேற்படி தனலட்சுமியை கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தாக்குதலில் ரத்த காயமடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்து கொலையுண்ட தனலட்சுமியின் கணவர் செல்வகுமார் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட காளிமுத்துவை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட காளிமுத்து நேற்று (06.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.