பூந்தமல்லி: சென்னை- போரூர், குன்றத்தூர் சாலை எம்.எஸ்.நகர் அருகே நேற்று முன்தினம் இரவு எஸ்ஆர்எம்சி (போரூர்) போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீஸார் மடக்கிபிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவர்களின்கை பையை போலீஸார் சோதனை செய்தனர். அதில், ரூ.28 லட்சம் மதிப்புள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்ததும், அதனை அவர்கள் மாற்ற முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து முதல் கட்ட விசாரணை நடத்தினர். கைதான, இருவரும் செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் (34), அங்குராஜ் (37 ) ஆவர். இருவரும் ரியல் எஸ்டேட், கவரிங் நகை விற்பனை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழிலை செய்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு அறிமுகமான இஸ்மாயில் என்ற நபர், ‘என் உறவினரான சீர்காழியைச் சேர்ந்த சதாமிடம் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இருக்கிறது. பண மதிப்பிழப்பின்போது அவர் வெளிநாட்டில் இருந்ததால் அவரிடம் இருந்த பணத்தை மாற்ற இயலாமல் போனது. ஆகவே மாற்றி தரவேண்டும். அப்படி மாற்றி தந்தால், கமிஷன் தொகை அளிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு சீர்காழியைச் சேர்ந்த சதாம், சென்னை- கோயம்பேட்டைச் சேர்ந்த விக்கியிடம் அளித்த ரூ. 28 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பெற்ற இருவரும், கடந்த 20 நாட்களாக அவற்றை மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
வடபழனியைச் சேர்ந்த கார்த்திக், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் அவற்றை எடுத்துக் கொண்டு வடபழனிக்கு நேற்று முன் தினம் மாலை சென்றுள்ளனர். அவர்களை காவிரி ரெபினா என்ற பெண்மணியிடம், கார்த்திக் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அப்போது, அப்பெண்மணி, ‘பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டுச் சென்றால், ரூ.1 லட்சத்துக்கு ரூ. 4,000 வீதம்நாளை வந்து பெற்றுக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்த இருவரும் பழைய ரூபாய் நோட்டுகளுடன் அனகாபுத்தூர் திரும்பும் போது, போரூரில் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.