சென்னை: வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர் சிட்டி ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் பெண்களுக்கான பெட்டியில் பயணித்துள்ளார். அப்போது, ரயில் ஜோலார்பேட்டை வந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த பெட்டியில் ஏறியுள்ளார். இது பெண்களுக்கான பெட்டி என்று கர்ப்பிணி கூறியும் அந்நபர் அங்கிருந்து இறங்கவில்லை. ரயில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அந்த நபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அப்பெண் கத்திக் கூச்சலிட்டுள்ளார். அந்த நபர் சிறிதும் இரக்கமே இல்லாமல், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். கர்ப்பிணியின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த பொதுமக்கள் அவரை மீட்டனர்.
உடனடியாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் அடுக்கம்பாளையம் அரசு மருத்துவக் கல்லூரியில் அப்பெண்ணை அனுமதித்துள்ளனர். கர்ப்பிணிக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இன்று காலையிலேயே நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹேமராஜ் ஏற்கனவே செல்போன் பறித்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைதானவர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.