கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணைக் கடத்தி, பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் சேலத்தில் இருந்து சென்னை மாதவரத்தில் உள்ள தனது தோழியின் வீட்டுக்கு வருவதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த 3-ம் தேதி இரவு காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தான் மாதவரத்தில் இறக்கி விடுவதாக கூறி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றியதாகக் கூறப்படுகிறது. ஆட்டோ வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்றபோது ஆட்டோ ஓட்டுநர் நண்பர்களுக்கு போன்செய்து வரச் சொல்லியுள்ளார். அப்போது வண்டலூர் அருகே அதே ஆட்டோவில் வேறு இருவரும் ஏறியுள்ளனர். அப்போது திடீரென இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மேற்கு வங்கப் பெண், தனது தோழிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, போலீஸார் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மதுரவாயல் அருகே மாதா கோயில் தெருவில் அந்த பெண்ணை இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடினர்.
இதையடுத்து அப்பெண் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக, முத்தமிழ்செல்வன், தயாளன் என்ற 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்
றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
முத்தமிழ் செல்வன் என்பவர் பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றியவர் என்பது தெரிந்தது. தயாளன் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீஸார் விரட்டிப் பிடிக்கும்போது கீழே விழுந்து அவர் கால் முறிந்துள்ளது. மேலும் ஒருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.