திருச்சி: மணப்பாறையில் அருகே உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மணப்பாறைபட்டி சாலையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் 4ம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளியின் அறங்காவலரும் தாளாளருமான சுதாவின் கணவர் வசந்த குமார் (54) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பள்ளி முடிந்த பிறகு தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அந்த சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மணப்பாறை மகளிர் போலீஸாரிடம் பள்ளி தாளாளரின் கணவர் வசந்த குமார் உள்பட பள்ளி நிர்வாகம் மீது புகார் அளித்தனர்.
ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் கடும் கோபமடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று வசந்த குமார் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அந்தப் பள்ளியின் முன்பு பெற்றோர்கள், உறவினர்கள் திரண்டு கல், கட்டைகளை எடுத்து பள்ளி மீது வீசி எறிந்தனர். இதில் வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பூந்தொட்டிகளும் தூக்கி வீசப்பட்டு உடைக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரையும் அடித்து உதைத்து தலைகீழாக கவிழ்த்தனர். இதனையடுத்து எஸ்பி செல்வ நாக ரத்தினம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தவறு செய்தவர்களை கைது செய்வதாக உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இதன் பிறகு பள்ளி தாளாளர் சுதா, அவரது கணவர் வசந்த குமார், இளஞ்செழியன் உள்பட 4 பேர் கைது செய்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். 4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.