மாங்காட்டில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் ஓட்டுநர் தற்கொலை


பூந்தமல்லி: மாங்காட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கம், கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(34). இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய சதீஷ்குமார், பெற்றோரின் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து, தன் அறைக்கு சென்ற சதீஷ்குமார், நீண்ட நேரமாகியும் வராதால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையினுள்ளே சென்று பார்த்தபோது சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து, தகவலறிந்த மாங்காடு போலீஸார், சம்பவ இடம் விரைந்து, சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை- போரூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாரின் விசாரணையில், சதீஷ்குமாருக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி, சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது.

இதனால், பாக்கியலட்சுமி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்ற நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி வீண் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் மனைவியிடம் வீடியோ காலில் பேசிவிட்டு சென்றவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சதீஷ்குமார் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து, போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x