கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள, கணுவாய்ப்பாளையத்தைச் சேர்ந்தவர் விமல்குமார் (24). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கும், கோவையைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. அந்த பெண் கல்லூரியில் படித்து வருகிறார்.
பின்னர், இவரது நடவடிக்கை பிடிக்காததால் அந்த கல்லூரி மாணவி, விமல்குமாரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த விமல்குமார், கல்லூரி மாணவியை சந்தித்து தன்னிடம் பேசுமாறும், தன்னை காதலிக்குமாறும் வற்புறுத்தியுள்ளார். அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த விமல்குமார், அந்த மாணவியை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். இதனால் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15-க்கும் மேற்பட்ட போலி பெயரில் கணக்குகளை தொடங்கினார். அதன் மூலம் அந்த மாணவி குறித்து தொடர்ந்து அவதூறாக கருத்துகளை பதிவிட்டும், ஆபாசமாகவும் பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்த தகவல் அந்த மாணவிக்கு தெரியவந்தது.
தொடர்ந்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக அந்த மாணவி, மாநகர சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், விமல்குமார் கல்லூரி மாணவி குறித்து போலி பக்கங்களை துவக்கி அவதூறாக பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை இன்று (பிப்.6) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.