ராமேசுவரம்: இலங்கைக்கு பறக்கும் அணில்கள், பந்தயப் புறாக்கள், ஆப்ரிக்க காதல் கிளிகள் கடத்தப்பட்டது குறித்து ராமேசுவரத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டம் பேசாலை பகுதியில் தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 8 பறக்கும் அணில்கள், 220 பந்தைய புறாக்கள், 20 ஆப்ரிக்க காதல் கிளிகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அந்நாட்டைச் சேர்ந்த மூவரை புதன்கிழமை கைது செய்தனர்.
விசாரணையில், பறக்கும் அணில்கள், பந்தயப் புறாக்கள், ஆப்ரிக்க காதல் கிளிகளை ராமேசுவரம் கடற்பகுதியில் இருந்து வந்த கடத்தல் படகில் இருந்து, இலங்கை கடல் எல்லையில் பெற்று கொண்டு. பைபர் படகு மூலம் மூவரும் தலைமன்னார் கடற்பகுதிக்கு கொண்டு வந்தாக தெரிய வந்துள்ளது.
தமிழகக் கடலோரப் பகுதிகளில் இருந்து குறிப்பாக ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள், பீடி இலைகள், கடல் அட்டை, மஞ்சள், அழகு சாதனப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில், புதியதாக வளர்ப்பு பிராணிகளும் இடம் பெற்றுள்ளதால், இது குறித்து ராமேசுவரத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.