கிளாம்பாக்கத்திலிருந்து ஆட்டோவில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் சீண்டல்: 2 பேர் கைது


சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து இளம் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் சேலத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவர் அங்கிருந்து சென்னை மாதவரத்தில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு வேலை செய்ய பேருந்து மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திங்கட்கிழமை ( 3.2.2025) இரவு வந்துள்ளார். பின்னர் மாதவரம் செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தான் மாதவரத்தில் இறக்கி விடுவதாக கூறி அந்த பெண்ணை ஆட்டோவில் ஏறுமாறு கூறியுள்ளார்.

ஆனால், அந்த பெண் மறுக்கவே, பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றியுள்ளார். ஆட்டோ வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்ற போது ஆட்டோ ஓட்டுநர் நண்பர்களுக்கு போன் செய்து வர சொல்லியுள்ளார். அப்போது வண்டலூர் அருகே அதே ஆட்டோவில் வேறு இருவரும் ஏறியுள்ளார். அப்போது அவர்கள் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண் தனது தோழியின் கணவருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

அவரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக போலீஸார் ஆட்டோவில் செல்லும் பெண்ணின் செல்போன் டவரை கண்காணித்து ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றனர். போலீஸார் பின் தொடர்ந்து வருவதை அறிந்த ஆட்டோ டிரைவர் மதுரவாயல் அருகே மாதா கோயில் தெருவில் அந்த பெண்ணை கீழே இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

பெண்ணை மீட்ட காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினார். தப்பியோடிய மூவரையும் சிசிடிவி கேமரா உதவியுடன் தேடினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முத்தமிழ்செல்வன், தயாளன் என்ற இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். இதில் முத்தழிழ் செல்வன் என்பவர் பெண்ணை வலுக்கட்டாயமாக ஏற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப் பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தெரிவித்தனர்.

x