ஆவடி: காவல் ஆணையர் முன்பு பெண் தற்கொலை முயற்சி!


திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகர் போலீஸ் கன்வென்சன் சென்டரில் இன்று ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும்  முகாமில், காவல் ஆணையர் சங்கர் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற மின்னல் கொடியை போலீஸார் தடுத்து, உரிய அறிவுறுத்தல்களை வழங்கினர்.  

ஆவடி: ஆவடி அருகே காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி காவல் ஆணையர் முன்பு பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ல திருமுல்லைவாயில், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் மின்னல்கொடி( 40). இவர் தன் முதல் கணவர் இறந்த நிலையில், 2-வதாக மணி வாசகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மணிவாசகம், மின்னல்கொடியின் சேமிப்பு மற்றும் நகைகளை விற்று ரூ. 20 லட்சம் பெற்று, பேக்கரி மற்றும் ஓட்டல் நடத்தி, இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை மின்னல் கொடி தட்டிக் கேட்டதால், அவரை விட்டு மணிவாசகம் பிரிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், மின்னல்கொடி வசித்து வரும் வீட்டை, மணிவாசகம் தன் 3-வது மனைவியின் மகளுக்கு எழுதி கொடுத்துள்ளதால், அவர், அந்த வீட்டை சந்திர மௌலி என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழலில், இரண்டு வாரங்களுக்கு முன், மின்னல் கொடி குடும்பத்துடன் வீட்டில் இருந்த போது, மர்ம நபர்கள் சிலர், கதவை உடைத்து உள்ளே சென்று, பொருட்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்னல்கொடி அளித்த புகார் மீது திருமுல்லைவாயில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மின்னல்கொடி, புதன்கிழமை திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகர் போலீஸ் கன்வென்சன் சென்டரில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில், காவல் ஆணையர் சங்கர் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார், மின்னல் கொடியை தடுத்து, அவருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினர்.

தொடர்ந்து, காவல் ஆணையர் சங்கர், மின்னல்கொடியின் புகார் மீது துரிதமாக உரிய நடவடிக்கையை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

x