கடலூரில் போதை மாத்திரை விற்பனை செய்த ஈரோட்டை சேர்ந்த கும்பல் கைது


கடலூர்: கடலூரில் போதை மாத்திரை விற்பனை செய்த ஈரோட்டை சேர்ந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 31-ம் தேதி அன்று போதை பொருள் குற்ற தடுப்பு நடவடிக்கை தொடர்பாக கடலூர் திருப்பாதிரிபுலியூர் பேருந்து நிலையம் அருகில் போலீஸார் கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு நின்றிருந்த மூன்று போரை பிடித்து போலீஸார் சோதனை செய்ததில் மாத்திரைகள் மற்றும் சிரஞ்சி வைத்திருந்தை கண்டு விசாரணை மேற்கொண்டனர்.

போதைக்காக ஈரோடு நபர் மூலம் மாத்திரைகளை வாங்கி சிரஞ்சி மூலம் உடலில் ஏற்றி போதையில் இருந்து வருவதாக கூறியவர்களிடம் இருந்து 139 போதை மாத்திரைகள் மற்றும் 3 சிரஞ்சிகளை கைப்பற்றினர். இவர்கள் மீது கடலூர் மதுவிலக்கு அமல் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடலூர் புதுவண்டிப்பாளையம் முருகவேல் மகன் சபரிநாதன் (20), புதுவண்டிப்பாளையம் கோதண்டராமன் மகன் லட்சுமிபதி (20), புதுவண்டிப்பாளையம் தட்சிணாமூர்த்தி மகன் சதீஷ் (20) ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதன் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி செளமியா மேற்பார்வையில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர் தவசெல்வன் தலைமையிலான தனிப்படையினர் ஈரோடு சென்று விசாரணை மேற்கொண்டதில் போதை மாத்திரைகள் ஈரோடு, கருங்கல்பாளையம் கேஎல் ஸ்டோர் உரிமையாளர் மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் அதன் உரிமையாளர் ஈரோடு, கவுண்டச்சி பாளையம் அஞ்சல், தாஸ்நாயகன் பாளையத்தை சேர்ந்த சேர்ந்த சின்னையன் மகன் கண்ணன் (39) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஈரோடு கருங்கால் பாளையத்தை சேர்ந்த இஸ்மாயில் மகன் சல்மான்கான் (29), ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த சீனிவாசன் மகன் வினோத்குமார் (30), ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த வரதராஜன் மனைவி கலைவாணி (42) ஆகிய 4 பேரையும் கைது செய்தும், அவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் 2500, பணம் ரூ.50,000, லேப்டாப்-1, செல்போன் 3, மோட்டார் சைக்கிள் 1, தின்னர் 2 பாட்டில்கள், கைப்பற்றப்பட்டு இன்று (பிப்.4) மாலை கடலூர் கொண்டு வரப்பட்டனர். இந்த நிலையில் அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

x