கடலூர்: என்எல்சி பொது மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து போலீஸார் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அது புரளி என்று தெரிய வந்தது.
நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி இந்திய நிறுவனத்தில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள், பொறியாளர்கள் தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நெய்வேலியில் உள்ள என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று(பிப்.4) மதியம் என்எல்சி பொது மருத்துவமனையின் தலைமை அதிகாரிக்கு எந்த விலாசமும் இல்லாமல் கடிதம் ஒன்று வந்தது. அதை பிரித்துப் பார்த்த போது என்எல்சி பொது மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைத்துள்ளோம் என எழுதியிருந்தது.
அதனைத் தொடர்ந்து என்எல்சி மருத்துவமனை தலைமை அதிகாரிகள் நெய்வேலி நகர காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையில் போலீஸார் மருத்துவமனைக்கு சென்று நோயளிகள், பொதுமக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் நோயாளிகள், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்புமாறு காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.
மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் லியோ ஆகியோர் வரவழிக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள், மருத்துவமனை முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சோதனை செய்தனர். மோப்ப நாய் லியோ, மருத்துவமனையில் வெடிகுண்டு உள்ளதா என்று மோப்பம் பிடித்து பார்த்தது. கைரேகை நிபுணர்கள் மர்ம கடிதத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் மருத்துவமனையில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என தெரியவந்தது. இதனால் மருத்துவமனை பகுதியில் சிறு பரபரப்பு காணப்பட்டது.மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மொட்ட கடிதம் அனுப்பியவர் யார் என போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.