விவசாயி கொலை வழக்கில் தந்தை மற்றும் 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை - தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு 


தென்காசி: விவசாயி கொலை வழக்கில் தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே உள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா என்ற துரை (54). விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி உச்சிமாகாளி. இவர்களது 2 மகன்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூன்றாவது மகன் மாரிமுத்துவுக்கும் பாப்பாக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் உமாசெல்விக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் சுப்பையா குடும்பத்தினருடன் மாரியப்பன் குடும்பத்தினருக்கு விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 16.8.2022 அன்று சுப்பையாவும் இவரது மனைவி உச்சிமாகாளியும் முக்கூடல் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு சுப்பையாவின் தம்பி மகன் இசக்கிமுத்து குளித்துக்கொண்டு இருந்துள்ளார். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க செல்ல வேண்டியது இருப்பதால் இசக்கிமுத்துவுடன் வீட்டுக்கு வருமாறு கூறிவிட்டு, சுப்பையா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவருக்கு பின்னால் இசக்கிமுத்துவும், உச்சிமாகாளியும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தனர். திருநெல்வேலி- கடையம் மெயின் ரோட்டில் சென்றபோது, எதிரே 2 இருசக்கர வாகனங்களில் வந்த உமாசெல்வியின் அண்ணன்கள் லண்டன் துரை என்ற குட்டி (25), சுடலைமணி (26), இவர்களது தந்தை மாரியப்பன் (51) ஆகியோர் சேர்ந்து சுப்பையாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மனோஜ்குமார், குற்றம் சுமத்தப்பட்ட 3 பேருக்கும், ஆயுள் தண்டனைவும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.வேலுச்சாமி ஆஜராகி வாதாடினார்.

x