சென்னை: ஜெ.ஜெ. நகர் பகுதியில் மகளுடன் சென்ற தாயாரிடம் தகராறு செய்து கையை பிடித்து இழுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ சென்னை, அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் 15 வயது பள்ளி மாணவி தினந்தோறும் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும்போது, ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வருவதாக மாணவி கூறியுள்ளார்.
இந்த நிலையில், மாணவியும் அவரது தாயாரும் நேற்று (03.02.2025) காலை பள்ளிக்கு செல்லும் வழியில், அரசர் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மாணவியின் செல்போன் எண்ணை கேட்டதாகவும், தாயார் யார் நீ என்று அந்த நபரை கேட்டபோது, அந்த நபர் மாணவியின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசி அவரது கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். அதன்பின்னர், பொதுமக்கள் வருவதை கண்டு அந்த நபர் தப்பிச் சென்றதாகவும், மாணவியின் தாயார் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மன்னூர்பேட்டை சங்கர் மகன் பிரேம்நாத் (37) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட பிரேம்நாத் விசாரணைக்குப் பின்னர் நேற்று (03.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.