நாமக்கல்லில் சோகம்: தண்ணீர் தொட்டியில் மூழ்கி இரு குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு


நாமக்கல்: தண்ணீர் தொட்டியில் மூழ்கி இரு குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு பெரியமணலி அருகே கொளத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் ராசிபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் அரசுக் கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இந்துமதி (28) என்ற மனைவி யாத்விக் ஆர்யன் (3), நிவின் ஆதித் என்ற 11 மாத குழந்தை உள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் நாமக்கல் போதுப்பட்டியில் உள்ள தந்தை வீட்டிற்கு இந்துமதி குடும்பத்துடன் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டின் முன்புறம் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் இந்துமதி, யாத்விக் ஆர்யன் மற்றும் 11 மாத குழந்தை நிவின் ஆதித் ஆகிய 3 பேரும் இறந்து கிடந்துள்ளனர்.

தகவல் அறிந்த காவல் துறையினர் 3 பேரின் பிரேதத்தையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், சிறுவன் யாத்விக் ஆர்யன் தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார். அவரை மீட்க முயன்றபோது இந்துமதி 11 மாத குழந்தையுடன் தவறி விழுந்து இறந்திருக்க கூடும் என தெரியவந்துள்ளது. இதுதான் காரணமா அல்லது இவர்கள் மரணத்துக்கு வேறு என்ன காரணம் என சம்பவம் தொடர்பாக நாமக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x