கோயம்பேடு பகுதியில் பேருந்தில் பெண் பயணிக்கு பாலியல் சீண்டல்: ஓட்டுநர் கைது


சென்னை: கோயம்பேடு பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாற்று பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை, கொடுங்கையூர் பகுதியைச்சேர்ந்த 51 வயது பெண் அவரது கணவருடன் நேற்று (02.02.2025) பெங்களூரில் தனியார் பேருந்தில் ஏறி, சென்னை நோக்கி வந்த கொண்டிருந்த போது, இரவு சுமார் 11.00 மணியளவில் கோயம்பேடு பகுதியில் பேருந்து வந்த போது, பேருந்தின் மாற்று ஓட்டுநர் உறங்கிக்கொண்டிருந்த மேற்படி பெண் பயணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பிஎன்எஸ் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட நாமக்கல் பரமத்தி வேலூர், கே.புதுப்பாளையம், ராமசாமி மகன் கிருஷ்ணசேகர் (38) என்பவரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட கிருஷ்ணசேகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x