ஆவடி: ஆவடி அருகே மின் கசிவால் பழைய மரப்பொருட்கள் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பழைய மரப் பொருட்கள் தீக்கிரையாகின.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி- காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன்( 50). இவர், ஆவடி அருகே உள்ள கண்ணப்பாளையம் பகுதியில் பழைய மரப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த பழைய மரப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கு பகுதியில் இன்று மதியம் மின் கசிவால் தீப்பற்றியது. அத்தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி, கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி தீயணைப்பு நிலையங்களின் தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் வருகை தந்து, 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பழைய மரப் பொருட்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.