பொன்னேரி: மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி(35). இவர் தன் சகோதரி மகன் விமல் (14) உடன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்னை- வில்லிவாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மீஞ்சூர் அருகே வல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்ற போது, மீஞ்சூரில் இருந்து வடசென்னை அனல் மின் நிலையம் சென்று கொண்டிருந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அக்கம்பக்கத்தினரால் கொண்டு செல்லப்பட்ட விமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .