சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 193 பேரிடம் ரூ.2 கோடி மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் வெளிநாட்டு வேலைக்காக சென்னையைச் சேர்ந்த சாய் புதின் (51) என்பவரை கடந்த 2023ம் ஆண்டு அணுகி உள்ளார். அப்போது அவர் போலந்து நாட்டில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் இறைச்சி வெட்டும் வேலை இருப்பதாகவும், அந்த வேலைக்கு முன் பணமாக ரூ.1.25 லட்சம் செலுத்த வேண்டும் என்று பத்ப நாபனிடம் கூறியுள்ளார். இதை நம்பி ரூ.1.25 லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து வெகு நாட்கள் ஆகியும் விசா வாங்கி கொடுக்காததால், கொடுத்த பணத்தை பத்ம நாபன் திருப்பி கேட்டுள்ளார். ஆனால், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் சாய்பதின் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பத்மநாபன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், சாய் புதின் போலியான கன்சல்டன்சி நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் போர்ச்சுகல், இத்தாலி, கேமேன் தீவு, போலந்து, ஜெர்மன் போன்ற நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 193 பேரிடம் ரூ.2 கோடிக்கும் மேல் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த 30ம் தேதி காவல் ஆய்வாளர் ஞான சித்ரா தலைமையிலான தனிப்படை போலீஸார் சாய்புதினை கைது செய்து, அவரிடம் இருந்து லேப் டாப், போலி வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் சாய் புதினிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை கண்டறிந்து, அவர்களிடம் புகார் பெறும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.