சூளைமேடு பகுதியில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை: மேலும் 5 பேர் கைது


சென்னை: சூளைமேடு பகுதியில் கொக்கைன் என்கிற போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் 9 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 கிராம் கொக்கைன், 8 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து கடந்த 25.01.2025 அன்று மாலை, சூளைமேடு, அண்ணா நெடும்பாதை மற்றும் ராகவன் தெரு சந்திப்பு அருகே கண்காணித்து, அங்கு 2 கார்களின் அருகில் கொக்கைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த பயாஸ் அகமது, சந்திரசேகர் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அதனை தொடர்ந்து 27.01.2025 அன்று வாசில் அகமது, அனிருத் சௌத்ரி, அர்ஜுன், ரோகன், நிதிஷ்குமார், ஜுலியன் டிசான், அருண்ராஜ் சென்னை ஆகிய 9 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 3.93 கிராம் கொக்கைன், 854 கிராம் கஞ்சா, 11 செல்போன்கள், 2 எடை மெஷின்கள் மற்றும் 3 கார் உள்ளிட்ட வழக்கு சொத்துக்களை கைப்பற்றி சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த கண்பத் மகன் மயூர் புராட் (35), பைசல் மகன் நளிம்பாடி (23), ஆல்பர்ட் மகன் ராயன் டேனி(19), லிஜி மகன் மிக்கேல் (எ) மிக்கி (20), அப்துல்கான் மகன் அயன்கான் (21) ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 55 கிராம் எடை கொண்ட கொக்கைன், 850 கிராம் கஞ்சா இலை, 3 கிராம் ஓஜி கஞ்சா, 8 செல்போன்கள், 3 எடைமெஷின்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எதிரிகள் 5 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (31.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x