நுங்கம்பாக்கத்தில் வீட்டை காலி செய்ய சொல்லி பெண்ணை தாக்கிய வழக்கு: கணவன், மனைவி கைது


சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் வீட்டை காலி செய்ய சொல்லி, பெண்ணை தாக்கி அவமானபடுத்தி வீட்டிலிருந்த பொருட்களை வெளியே தூக்கிப்போட்ட கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை, நுங்கம்பாக்கம், மேற்கு மாட வீதியில் உள்ள வீட்டில் நிரோஷா (38) என்பவர் குடும்பத்துடன் குத்தகைக்கு வசித்து வருகிறார். நிரோஷா 2013ம் ஆண்டு முதல் மேற்படி வீட்டின் உரிமையாளர் யசோதா என்பவரிடம் பணம் ரூ.15 இலட்சம் பணம் கொடுத்து குத்தகைக்கு வசித்து வருவதாகவும், வீட்டு உரிமையாளர் யசோதாவின் மகள் மற்றும் மருமகனுக்கு வியாபாரத்தில் பணம் தேவைப்படுவதாக யசோதா கேட்டதன்பேரில், நிரோஷா 2014ம் ஆண்டு முதல் பல தவணைகளாக மொத்தம் ரூ.23.5 லட்சம் பணம் கடனாக கொடுத்துள்ளதாகவும், மேலும் உரிமையாளர் யசோதாவின் பேத்திக்கு 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றபோது கடனாக பணம் கேட்டபோது, 13 ¼ சவரன் தங்க நகைகள் கொடுத்ததாகவும் நிரோஷா புகார் அளித்துள்ளார்

மேலும், சமீபத்தில் யசோதா மற்றும் அவரது குடும்பத்தினர் நிரோஷாவை வீட்டை காலி செய்ய சொன்னபோது, நிரோஷா வீடு குத்தகை பணம் மற்றும் கடனாக கொடுத்த பணம் என மொத்தம் ரூ.38.5 லட்சம் பணத்தையும், கடனாக கொடுத்த 13 ¼ சவரன் தங்க நகையையும் திரும்ப தருமாறு கேட்டபோது, தருவதாக ஒப்புக்கொண்டு, பின்னர் சில நாட்கள் கழித்து யசோதா வீட்டினர் நிரோஷாவிடம் பணம் தரமுடியாது ஆனால் உன்னை எப்படி காலி செய்ய வைக்கனும் என தெரியும் என்று கூறிச் சென்றதாகவும், கடந்த 30.01.2025 அன்று மதியம் நிரோஷா மேற்படி வீட்டில் தனியாக இருந்தபோது, யசோதாவின் மகன் குமார் மற்றும் குமாரின் மனைவி லதா ஆகியோர் மேலும் சில நபர்களுடன், நிரோஷாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, நிரோஷாவை தாக்கி தகாத வார்த்தைகளால் பேசி, அவரது சேலையை பிடித்து இழுத்து அவமானபடுத்தியும், வீட்டிலிருந்த பொருட்களை எடுத்து வந்து வெளியே போட்டு, வீட்டை பூட்டிவிட்டு சென்றதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் நிரோஷா F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் தொடர்புடைய சுந்தரம் மகன் குமார்(52) மற்றும் இவரது மனைவி லதா(47) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x