ஆவடி: அம்பத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை அம்பத்தூர் அருகே பட்டரவாக்கம் ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்ட் பின்புறம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த போலீஸார், அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் கையில் பையுடன் வந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அவ்விசாரணையில், அந்த இளைஞர்கள் மதுரை, ஐரவதநல்லூரை சேர்ந்த இளமை சிவா (29), விருதுநகர் மாவட்டம் ராமசாமியாபுரத்தை சேர்ந்த இருளப்பன் (22) என்பதும், அவர்கள் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து,அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம் பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், இளமை சிவா, இருளப்பன் ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.