சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான ரூ.80 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனையை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் (ம) நிர்வாக அலுவலர் சி.பிரசாத் என்பவர் முகப்பேர் மேற்கு திட்டத்தில் குறைந்த வருவாய் பிரிவு-1, மனை எண்.7/861-ல் உள்ள சொத்தை பொய்யான ஆவணங்கள் தயார் செய்து எதிரிகள் அபகரித்ததாக கொடுத்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு LFIW பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், உத்தரவுப்படி மத்திய குற்றப் பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் ராதிகாவின் மேற்பார்வையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட துரை பாண்டியன், ஜெகதீசன், தனலட்சுமி மற்றும் நவீன் ராஜ் ஆகியோரை கைது செய்து ஜனவரி 29ம் தேதி அன்று நீதித்துறை நடுவர், சிசிபி மற்றும் சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சென்னை மாநகரில், சொத்துக்கள் வாங்கும் நபர்கள் விற்பனை செய்யப்படும் நிலத்தின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மற்றும் வருவாய் துறை அலுவலகங்களில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து சொத்துக்கள் வாங்க அறிவுறுத்தப் படுகிறது” என்று காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.