படப்பையில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை: 60 வயது அதிமுக நிர்வாகியை துடைப்பத்தால் விளாசிய பெண்கள்!


காஞ்சிபுரம்: படப்பை பகுதியில் இளம் பெண்ணை காதலிப்பதாக தொல்லை கொடுத்த அதிமுக நிர்வாகியை, அப்பெண்கள் துடைப்பத்தால் அடித்த வீடியோ வைரலாகியுள்ளது. இந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்படப்பை பகுதியில் வசித்து வருபவர் பொன்னம்பலம் (60). இவர் அதிமுக குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருடைய வீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 24 வயது பெண் தனது தோழிகளுடன் வாடகைக்கு தங்கி ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

பொன்னம்பலம் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி டார்சர் செய்துள்ளார். இதனால் அந்த பெண் வீட்டை காலி செய்து படப்பையில் வேறு ஒரு வீட்டில் தங்கி பணிக்கு சென்று வந்தார். அப்போது அந்த பெண் தங்கி இருந்த வீட்டிற்கு சென்றும், செல்போனில் ஆபாசமாக பேசியும் தொல்லை கொடுத்துள்ளார். அப்பெண் வசிக்கும் வீட்டுக்குச் சென்று தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழிகள், அதிமுக நிர்வாகி பொன்னம்பலத்தை துடப்ப கட்டையால் அடித்து விரட்டியுள்ளனர்.

இதுகுறித்த, வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் மணிமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். மணிமங்கலம் போலீஸார் நேற்று பொன்னம்பலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். படப்பை பகுதியில் அதிமுக நிர்வாகியை பெண்கள் தொடப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x