சைபர் குற்றம் புரிய வெளிநாடுகளுக்கு ஆட்சேர்ப்பு - கோவையில் 5 முகவர்கள் கைது


கோவை: சைபர் கிரைம் குற்றம் புரிய இளைஞர்களை, வெளிநாடுகளுக்கு அனுப்பும் சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் 5 பேரை கோவை சரக சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவை சரக சிபிசிஐடி அலுவலகத்தினர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 'இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, வெளிநாட்டில் வேலை தேடும் படித்த இளைஞர்கள் சட்ட விரோத ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக கம்போடியா, லாவோஸ், மியான்மர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அனுப்பப்படுகின்றனர். அங்கு அவர்கள் இணையவழி மோசடி எனப்படும் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இவர்களை மோசடி நபர்கள், போலியான சமூக ஊடகங்கள் மூலமாக பொதுமக்களை தொடர்புகொண்டு ஆன்லைன் விளையாட்டு, பிட்காயின் மோசடி போன்ற போலியான செயலிகளில் முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபட வைக்கின்றனர். இவர்கள் இணைய மோசடிகள் செய்ய ஒத்துழைக்க மறுத்தால், அவர்களை உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்துகின்றனர்.

இதுபோன்ற சைபர் அடிமைத்தனம் குறித்த குற்றங்களை தடுக்க தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறையினர் பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகாரின் பேரில், சட்ட விரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் கூட்டுச்சதி, மோசடி, குடியேற்றச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிந்து விசாரிக்கின்றது. இதுதொடர்பாக கோவை சரகத்தில் 3 வழக்குகள் உட்பட மாநிலம் முழுவதும் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோவை சிபிசிஐடி சரகத்தில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் சென்னையைச் சேர்ந்த பியோலியோராஜ், முகமது ஷேக் மீரான், சிவகங்கையைச் சேர்ந்த கவுதம், திருப்பூரைச் சேர்ந்த தாமோதரன், விருதுநகரைச் சேர்ந்த ராஜேஷ் என்ற ராஜதுரை ஆகிய 5 சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மேற்கண்ட 5 பேரும், 18 -க்கும் மேற்பட்டவர்களை தமிழ்நாட்டில் இருந்து லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளுக்கு சைபர் குற்றம் புரிய சட்டவிரோதமாக அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை சிபிசிஐடி பிரிவில் சைபர் அடிமைத்தனம் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 54 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

லாவோஸ், கம்போடியா நாடுகளுக்கு செல்லவிருநந்த 28 பயணிகள் சைபர் அடிமைத்தனத்தின் அச்சுறுத்தல் குறித்து விளக்கியதையடுத்து அவர்கள் அந்நாடுகளுக்கு செல்வதை கைவிட்டுள்ளனர். மேலும், சைபர் அடிமைத்தனம் வேலை செய்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 பேர் மியான்மர், கம்போடியா, லாவோஸ் நாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x