வியாசர்பாடியில் கோயில் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் - ஒருவர் கைது; 2 பேர் தலைமறைவு


சதீஷ்குமார்

சென்னை: வியாசர்பாடி பகுதியில் கோயில் நிலத்தை சுத்தம் செய்த பணியாளர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி, கொலைமிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை, வியாசர்பாடியில் உள்ள இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான ரவீஸ்வரர் கோயிலில் ஆச்சி சிவப்பிரகாசம் என்பவர் செயல் அலுவலராக உள்ளார். மேற்படி கோயிலுக்கு சொந்தமாக வியாசர்பாடி பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவுப்படி 2022ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அன்று அகற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2025ம் ஆண்டு கடந்த ஜனவரி 27ம் தேதி அன்று மதியம், கோயிலுக்கு சொந்தமான மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடங்களை கோயில் பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அருகில் வசித்து வரும் செல்வராஜ் மற்றும் அவரது மகன்கள் சதிஷ்குமார், முருகன் ஆகிய மூவரும் சேர்ந்து மேற்படி கோயில் பணியாளர்களை, பணி செய்யவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் கோயில் சார்பாக வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளையும், பேனர்களையும் சேதப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து ஆச்சி சிவப்பிரகாசம், வியாசர்பாடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர், தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்த சதிஷ்குமார் (33) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சதிஷ்குமார் விசாரணைக்குப் பின்னர் ஜனவரி 28ம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மேற்படி வழக்கில் தொடர்புடைய இருவரை பிடிக்க தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்” என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

x