சென்னை துணிக்கடையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்: பிஹார் வாலிபர் கைது


சென்னை: எழும்பூர் பகுதியில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, கீழ்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் 30 வயது பெண் நேற்று ஜனவரி 28ம் தேதி மதியம் எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள துணிக் கடையில் துணி எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு வேலை செய்யும் நபர் ஒருவர் பெண்ணிடம் அவதூறாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து மேற்படி பெண், எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், பிஎன்எஸ் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சூளை ஹைரோடு பகுதியில் வசிக்கும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சீத்தாராம் தாக்கூர் மகன் அசோக் தாக்கூர் (34) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அசோக் தாக்கூர் விசாரணைக்குப் பின்னர் நேற்று (29.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

x