சென்னை: திருவல்லிக்கேணியில் பிரபல குத்துச்சண்டை வீரர் நள்ளிரவில் வெட்டிக் கொல்லப்பட்ட பயங்கர சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் - ராதா ஆகியோரின் மகன் தனுஷ் (24). இவர் குத்துச்சண்டை போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். காவல்துறை பணிக்காக தயாராகி வந்துள்ளார் தனுஷ். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, வீட்டின் அருகே இளைஞர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனுஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனவே அவரது காவல்துறை பணி கனவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், நேற்று நள்ளிரவு தனது வீட்டின் அருகே தனுஷ் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒன்பது நபர்கள் கொண்ட கும்பலால் அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதை தடுக்க சென்ற அவரது நண்பர் அருண் குமார் என்பவரையும் கொடூரமாக தாக்கி விட்டு அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீஸார் தனுஷின் உடலை கைப் பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அருண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மோகன், செந்தில், டேவிட், விஷால் உள்ளிட்ட ஒன்பது பேரை ஐஸ் ஹவுஸ் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தனுஷ்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. குத்து சண்டைவீரர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.