சென்னை: கொருக்குப்பேட்டை பகுதியில் ஆவின் பால் முகவர்களின் பணம் ரூ.5.82 லட்சத்தை அபகரித்து மோசடி செய்த ஆவின் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ”சென்னை, திருவொற்றியூர், துலுக்காணம் தெருவில் வசித்து வரும் மாரிக்கனி மனைவி சேர்மத்தாய் (39) என்பவர் ஆவின் பால் முகவராக இருந்து அவரது வீட்டினருகே ஆவின் பால் விற்பனை செய்து வருகிறார். சேர்மத்தாய் பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள ஆவின் அலுவலகத்தில் தினந்தோறும் வந்து பணம் செலுத்தி பால் பாக்கெட்டுகள் பெறுவது சிரமமாக இருப்பதால், மேற்படி ஆவின் அலுவலகத்தில் உள்ள இளநிலை உதவியாளர் சித்தராஜ் என்பவரிடம் தனது வங்கி கிரெடிட் கார்டை கொடுத்துவிட்டு, தினந்தோறும் வாங்கும் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு தனது கிரேடிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும்படி கூறி, அதற்கான கடவுச்சொல்லையும் கூறியுள்ளார்.
அதன்பேரில், சித்தராஜ், மேற்படி சேர்மத்தாயின் கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, சேர்மத்தாய்க்கு பால் பாக்கெட்டுகளை அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், சேர்மத்தாய் தனது கிரெடிட் கார்டு கணக்குகளை சரி பார்த்தபோது, சித்தராஜ் பால் பாக்கெட்டுகளுக்கு மேலாக பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
மேலும், சித்தராஜ் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதால், சேர்மத்தாயிடம், உங்களது காரை தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகைக்கு விட்டால் தினந்தோறும் ரூ.1,000 வாடகையாக தருவதாக கூறி, சேர்மத்தாயின் காரை வாங்கிக் கொண்டு வாடகை பணம் தராமல் ஏமாற்றி, காருக்கான வாடகை பாக்கி மற்றும் கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை பெற்று மொத்தம் ரூ.3,24,916 பணம் ஏமாற்றியுள்ளார்.
மேலும் இதே போல சித்தராஜ், புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற பால் முகவரின் வங்கி டெபிட் கார்டை வாங்கிக் கொண்டு அவரது கார்டிலிருந்து ரூ.2,58,030 பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார். மேற்படி மோசடிகள் குறித்து சேர்மத்தாய் மற்றும் சுரேஷ்குமார் கொடுத்த புகார் மீது கொருக்குப்பேட்டை காவல் நிலைய குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கொருக்குப்பேட்டை காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி மோசடியில் ஈடுபட்ட ஆவின் ஊழியர் அம்பத்தூர் முனியப்பன் மகன் சித்தராஜ் (30)என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எதிரி சித்தராஜ் விசாரணைக்குப் பின்னர் நேற்று (28.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.