திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்த பெண் உள்ளிட்ட வங்கதேசத்தினர் 15 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவி, திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக போலீஸார் சோதனை மேற்கொண்டு, நடப்பு மாதத்தில் மட்டும் திருப்பூரில் பெண் உட்பட 83 வங்கதேசத்தினரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடந்த சோதனையில் நல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட காசிபாளையம் காஞ்சி நகர் பகுதியில் 10 பேர், திருமுருகன்பூண்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வாவிபாளையம் பகுதியில் 5 பேர் என மொத்தம் 15 வங்க தேசத்தினரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குள் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்படித்தக்கது. இவர்கள் உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் முறைகேடாகத் தங்கி பணியாற்றி வந்த நிலையில், வெளிநாடு வாழ் தடை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.