சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 85 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை பெருநகர காவல், கோடம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் நேற்று (27.01.2025) கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம், மைதானம் அருகே கண்காணித்து, அங்கு சட்டவிரோதமாக Nitravet என்ற உடல் வலி நிவாரண மாத்திரைகளை மறைத்து வைத்திருந்த கோடம்பாக்கம் தனுஷ்குமார் (19) மற்றும் மந்தைவெளி அஜய் பெர்னாண்டஸ் (19) ஆகிய இருவரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 70 டைடோல் (Tydol) மற்றும் 15 நைட்ராவெட் (Nitravet) என மொத்தம் 85 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (27.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.