சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 4.5 கிராம் மெத்தம்பெட்டமைன், 3 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வகானம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், "நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் ஜனவரி 27ம் தேதி (நேற்று) வள்ளுவர் கோட்டம், வாட்டர் டேங்க் அருகே கண்காணித்து, அங்கு மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த ராயப்பேட்டை சைவமுத்தையா 6 வது தெருவை சேர்ந்த வினோஷ் ஆனந்த் (32), மயிலாப்பூர் சக்தி வாசுதேவன் (34), நல்லாங்குப்பம் நிதிஷ்குமார்(26) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மொத்தம் 4.5 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன், 3 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் ஜனவரி 27ம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் ஜனவரி 27ம் தேதி (நேற்று) சிவானந்தா சாலை, தூர்தர்ஷன் அலுவலகம் அருகே கண்காணித்து, அங்கு மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த முகமது அல்தாப் (27) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து மொத்தம் 10 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன், 6 சிரிஞ்சுகள் மற்றும் ஒரு எடை மெஷின் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முகமது அல்தாப் விசாரணைக்குப் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் படவுள்ளார்.