திருப்பூர்: காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொல்ல முயன்று, அந்த பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
உடுமலையை சேர்ந்தவர் சினேகா (23). கல்லூரி படிப்பை முடித்து தனது தாயாருடன் திருப்பூர் சத்யா காலனியில் குடியிருந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருவண்ணாமலையை சேர்ந்த தீபக் (19) என்ற இளைஞர் அறிமுகம் ஆகியுள்ளார். கோவை தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தீபக், சினேகாவுடன் நீண்ட நாட்களாக இன்ஸ்டா மூலம் பழகி வந்துள்ளார். சினேகாவை பார்க்க இன்று மதியம் (ஜன. 27) திருப்பூருக்கு வந்துள்ளார்.
சினேகாவின் தாய் வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சினேகாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வயதை காரணம்காட்டி சினேகா, தீபக்கின் நட்பை துண்டிக்க நினைத்தாராம். தீபக் வற்புறுத்தியும் அவரை காதலிக்க மறுத்துள்ளர். இந்நிலையில், ஆத்திரமடைந்த தீபக், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சினேகாவின் உடலின் பல்வேறு இடங்களில் குத்தி உள்ளார்.
ரத்த காயங்களுடன் அலறியபடி சினேகா வந்து அருகில் இருந்தவர்களின் உதவியை நாட, வீட்டுக்குள் இருந்த தீபக்கை காவல்துறையிடம் பிடித்துத்தர அங்கிருந்தவர்கள் முயற்சித்தனர். சிறிது நேரத்தில் காவல்துறையினர் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது, தீபக் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தீபக்கின் சடலத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடலில் பல்வேறு இடங்களில் காயம் அடைந்த சினேகா, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.