சென்னை: சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நிறுத்தியிருந்த லோடு ஆட்டோவை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார். திருடுபோன ஆட்டோ மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், ”சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, அருணாச்சலம் தெருவில் வசித்து வருபவர் விஜயசேகர் (64). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் நியூஸ் பேப்பர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த ஜனவரி 21ம் தேதி அன்று இரவு, மேற்படி நியூஸ் பேப்பர் கடையின் முன்பு அவரது லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு, சுமார் 1 மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அவரது லோடு ஆட்டோ திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து விஜயசேகர், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி லோடு ஆட்டோவை திருடிச் சென்ற புளியந்தோப்பை சேர்ந்த சூர்யா (36) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகார்தாரரின் லோடு ஆட்டோ மீட்கப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட சூர்யா மீது ஏற்கனவே 2 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சூர்யா விசாரணைக்குப் பின்னர் நேற்று (26.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.