திருக்கடையூரில் தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்கும் நோக்கில் விடுதியில் தங்கியிருந்த பிரபல ரவுடி உள்ளிட்ட 4 பேரை பொறையாறு போலீஸார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் தெற்கு வீதியில் பாஸ்கர் என்பவருக்குச் சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. நேற்று அந்த விடுதிக்கு வந்த 4 பேர், விடுதி மேலாளர் பாலமுருகனை மிரட்டி பணம் கேட்டதுடன், விடுதி உரிமையாளர் பாஸ்கர் எங்கே என்று கேட்டு மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். மேலும் பாலமுருகன் சட்டைப் பையில் இருந்த ரூ.500-ஐ பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின்பேரில், பொறையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பெரம்பூர் பண்டாரவாடையைச் சேர்ந்த பிரபல ரவுடி கலைவாணன் (43), சீர்காழி வேட்டங்குடியைச் சேர்ந்த மதன் (எ) மகாதேவன், பொறையாறு பெரிய காலனியைச் சேர்ந்த வினோத் பிரியகுமார் (40), சீர்காழி குமாரக்குடியைச் சேர்ந்த விஜயபாலன் (44) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் காவல் ஆய்வாளர் ஜெயந்தி உள்ளிட்ட போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் திருக்கடையூரைச் சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளதும், இதற்காக கடந்த 2 நாட்களாக திருக்கடையூர் பிரதான சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி நோட்டம் விட்டுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீஸார் தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி கலைவாணன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 4 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், நாட்டு வெடி குண்டு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 2 கைகளையும் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.