மதுரையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு முடி திருத்தும் தொழிலாளியை கொலை செய்து திருச்செந்தூர் அருகே தேரிப்பகுதியில் புதைத்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். வட்டாட்சியர் முன்னிலையில் உடலை போலீஸார் தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர்.
மதுரை லூர்துநகர் சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர் துளசிராமன். இவர், தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் மதுபோதை ஒழிப்பு தொண்டு நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் துளசிராமன் தனியாக தொண்டு நிறுவனம் நடத்தப் போவதாக தெரிவிக்கவே அவருக்கும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்திரன்(42) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. துளசிராமன் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் தனது மகனும், முடி திருத்தும் தொழிலாளியுமான சிந்துராஜிடம் (26)கூறியுள்ளார். சிந்துராஜ் தொண்டு நிறுவனத்துக்கு சென்று ரவீந்திரனை தாக்கி அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் உருவானது.
தொழிலாளி கொலை
இந்நிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான சிந்துராஜ் போதையில் வீட்டுக்கு வந்து மனைவி பானுப்பிரியாவை துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து ரவீந்திரன் நடத்தும் தொண்டு நிறுவனத்தில் சிந்துராஜை மறுவாழ்வுக்காக சேர்த்துள்ளனர். அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2020-ம் ஆண்டு சிந்துராஜ் திடீரென மாயமானார்.
மகன் மாயமானது தொடர்பாக மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் துளசிராமன் புகார் செய்தார். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் போலீஸார் கடைசியாக சிந்துராஜ் தங்கியிருந்த தொண்டு நிறுவனத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முன் விரோதம் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு சிந்துராஜை ரவீந்திரன், அவரது நண்பர்கள் பால்பாண்டி (42), வசந்த் (28) ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக்கி காரில் திருச்செந்தூர் எடுத்து வந்து, அங்குள்ள நண்பர் கண்ணன் (50) உதவியுடன் மெஞ்ஞானபுரத்தையடுத்த மாநாடு அருகே தேரிப்பகுதி இடுகாட்டில் புதைத்தது தெரிய வந்தது. பால்பாண்டி, வசந்த் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
உடல் தோண்டி எடுப்பு
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ரவீந்திரன், கண்ணன் ஆகியோர் வேறு ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப் பட்டிருந்த நிலையில் சிந்துராஜ் கொலை தொடர்பாக இருவரையும் மதுரை மாட்டுத்தாவணி காவல் ஆய்வாளர் மோகன் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்.
பின்னர் ரவீந்திரன், கண்ணன் இருவரையும் போலீஸார் திருச்செந்தூர் அருகே உள்ள மாநாடு தேரிபகுதிக்கு நேற்று அழைத்து வந்தனர். அவர்கள் சிந்துராஜ் உடலை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர்.
தொடர்ந்து திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவர் உதயகுமார், தடய அறிவியல் நிபுணர் கலாலட்சுமி, திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த இடத்தில் தோண்டிய போது சிறு, சிறு துண்டுகளாக சிந்துராஜின் உடல் எலும்புகள் கிடைத்தன. அதனை ஒரு வாளியில் போலீஸார் சேகரித்து டிஎன்ஏ பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட சிந்துராஜுக்கு மனைவி பானுப்பிரியா (30) மற்றும் ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது.