திருப்பூர்: திருப்பூரில் போதை ஊசி பயன்படுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் பனியன் நிறுவனங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் இவர்கள் போதைக்காக குறைந்த விலையுள்ள வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள காட்டுப்பகுதியில் 2 பேர் சந்தேகத்துக்கு இடமாக நேற்றிரவு அமர்ந்திருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு போலீஸார், 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் போதை ஊசி மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த முகமது பைசல் ( 25), முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சதாம் உசேன்(35) என்பதும், இருவரும் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது .
இவர்கள், ஆன்லைன் மூலமாக வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக வாங்கி அதில் இருந்து போதை மருந்து தயாரித்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் போதை ஊசிகளையும் மற்றவர்களுக்கு விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து 30 மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முகமது பைசல், சதாம் உசேன் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் போதை ஊசி வாங்கியவர்களின் விவரங்களை பெற்று, போலீஸார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.