புதுடெல்லி: அளவுக்கதிமாக பூச்சிக்கொல்லி கலப்பு எதிரொலியாக 4 டன் மிளகாய்த் தூளை திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் சார்பில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், அழகு சாதன பொருட்கள், உணவு பொருட்கள், சுத்தப்படுத்தும் திரவியங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் உத்தரவை அடுத்து பதஞ்சலி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஃப்எஸ்எஸ்ஐ நடத்திய ஆய்வுகளில் பதஞ்சலி நிறுவனத்தின், 200 கிராம் அளவுடைய மிளகாய்த் தூள் பாக்கெட்டுகளில் அளவுக்கதிமாக பூச்சிக்கொல்லி கலப்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த 200 கிராம் மிளகாய்த்தூள் பாக்கெட்டுகளை உடனடியாக திரும்ப பெறுமாறு உணவு கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 4 டன் மிளகாய் தூள் பாக்கெட்டுகளை பதஞ்சலி நிறுவனம் திரும்ப பெறுகிறது.
வாடிக்கையாளர்கள் பதஞ்சலி மிளகாய் தூள் பாக்கெட்டுகளை உடனடியாக வாங்கிய இடத்திலேயே திரும்ப ஒப்படைத்து, பணத்தை திரும்பப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.