கர்நாடக மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கில் கைதானவரின் வீட்டில் 15 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகேயுள்ள உல்லால் கே.சி. ரோடு பகுதியில் விவசாயக் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 17-ம் தேதி வந்த மூகமூடிக் கொள்ளையர்கள் 4 பேர், வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கடத்திச் சென்றனர். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள பத்மநேரி கிராமத்தைச் சேர்ந்த முருகாண்டி, கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஜோசுவா ஆகியோரை அம்பாசமுத்திரம் பகுதியில் மங்களூரு போலீஸார் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ தங்க நகைகள், ரூ.3 லட்சம், கார், 2 நாட்டுத் துப்பாக்கிகள், 3 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்களை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், பின்னர் மங்களூருக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய கண்ணன் மணி என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் 3 பேரும் கர்நாடக தனிப்படை போலீஸாரிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் பத்மநேரி கிராமத்துக்கு வந்தனர். அங்குள்ள முருகாண்டியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தங்க நகைகளை போலீஸார் கைப்பற்றினர். தொடர்ந்து, முருகாண்டியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.